இந்தியாவில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டை குறைக்கும் நோக்கில், முன்னோடியாக திகழும் ஒரு காரியத்தை செய்துள்ளார் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்.
டெல்லியிலுள்ள நாடாளுமன்றத்திற்கு ஹூண்டாய் கோனா மின்சார எஸ்யூவி காரில் வந்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், காற்று மாசுபாட்டிற்கு எதிரான போராட்டத்தில் பொதுமக்கள் தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவில் தலைநகர் டெல்லி உட்பட, நாட்டின் முக்கிய நகரங்களில் காற்று மாசுபாடு பிரதான பிரச்னையாகி வருகிறது. உயிர்களின் வாழ்வுக்கு அடிப்படையான காற்று மாசடைந்து வருவது பலருக்கும் அச்சுற்றுத்தலை ஏற்படுத்தி வருகிறது.காற்று மாசுபாடு உருவாவதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், முக்கிய காரணியாக இருப்பது பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்கள் வெளியிடும் புகை. இதை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு நாட்டில் மின்சார வாகன போக்குவரத்தை அதிகரிக்க விரும்புகிறது.
மின்சார ஆற்றல் வாகனங்களை பயன்படுத்தினால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாது. இதனால் கச்சா எண்ணெய் இறக்குமதி குறைந்து, பொருளாதார நிலை மேம்படும் என்பது இதில் கவனிக்க வேண்டிய அம்சமாகவுள்ளது.
பொதுமக்களிடம் மின்வாகன பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் ஜிஎஸ்டி வரி விதிப்பு குறைப்பு, ஃபேம் திட்டத்தின் கீழ் மானியம் என பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், பாராளுமன்ற கூட்டத்தில் பங்கேற்க ஹூண்டாய் நிறுவனம் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில் வந்திறங்கினார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட இந்த கார், வாடிக்கையாளர்களிடம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. மத்திய அரசு மட்டுமில்லாமல், பல்வேறு மாநில அரசு மற்றும் ஆட்சியாளர்க, அதிகாரிகளின் பயன்பாட்டுக்கு இந்த காரை பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
இந்த சூழலில் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கோனா மின்சார காரில் வந்தது பொதுமக்களிடம் கவனத்தை ஈர்த்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், எரிபொருள் வாகன பயன்பாட்டால் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டை குறைக்கும் நோக்கில் மத்திய அரசு வாகன பயன்பாட்டை மின்சார ஆற்றலுக்கு மாற்றும் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அரசின் இந்த முயற்சிக்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.