-கயல் மார்ஸல் மோலர்க், அமெரிக்காவை சேர்ந்த இவர், சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வந்தார். நண்பரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றார். இங்குள்ள சடங்குகளை கண்ணிமைக்காமல் பார்த்து வியந்தார்.
சம்பிரதாயங்களும், சடங்கு வைபவங்களும் அவரை வெகுவாக ஈர்த்தது. நம் நாட்டின் பாரம்பரியம், கலாசாரத்தில் லயித்து மனதை பறி கொடுத்த நினைவோடு தாய்நாடு திரும்பினார். அங்கு வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்ணை கரம் பிடித்தார்.
தான் பார்த்து வியந்த நண்பனின் திருமணத்தை போலவே தனது திருமணமும் விமரிசையாக நடக்க வேண்டும் என்று விரும்பினார். தனது விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக மீண்டும் இந்தியாவுக்கு திரும்பி வந்தார்.
இங்கு தனது திருமணத்தை தடபுடலாக நடத்தி முடித்து பலருடைய கவனத்தையும் ஈர்த்துவிட்டார். கயல் மார்ஸல் மோலர்க் அமெரிக்காவை சேர்ந்தவரா? இல்லை தமிழ்நாட்டில் வசித்தவரா? என்று ஆச்சரியப்படும் விதத்தில் திருமண சடங்கு வைபவங்களை நடத்தி அசத்தி இருக்கிறார். அவருடன் இல்லற வாழ்க்கையில் இணைந்திருக்கும் பெண்ணின் பெயர், சப்ரினா. 28 வயதாகும் இவருடைய பூர்வீகம் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தெரிசனங்கோப்பு கிராமம்.
இவரது பெற்றோர்: அய்யாவு பிள்ளை - பத்மாவதி. இந்த தம்பதியர் பணி நிமித்தமாக அமெரிக்காவில் குடியேறி இருக்கிறார்கள். அங்கு தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொண்டவர்கள் அமெரிக்க பிரஜையாகவே மாறிவிட்டார்கள். சப்ரினா, அமெரிக்காவில்தான் பிறந்து வளர்ந்திருக்கிறார். அங்கு படிப்பை தொடர்ந்து மருத்துவ படிப்பை பூர்த்தி செய்திருக்கிறார். மருத்துவ பயிற்சி மேற்கொள்ள ‘கெய்டாக’ ஒருவரை அணுக வேண்டியிருந்திருக்கிறது. அந்த ‘கெய்டு’தான் இந்திய கலாசாரத்தை நேசித்த கயல் மார்ஸல் மோலர்க். சப்ரினாவுக்கு பயிற்சி கொடுத்தபோது படிப்பை கடந்து இருவரும் நண்பர்களாக பழகினார்கள். ஒருகட்டத்தில் இருவருக்கும் இடையே நல்ல புரிந்துணர்வு ஏற்பட்டது. அதுவே காதல் அரும்ப அடித்தளமிட்டது. காதல் வானில் சிறகடித்து பறந்தவர்கள் இல்லற பந்தத்தில் இணைய முடிவெடுத்தனர்.